மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை நாடகம்
வானூர் அருகே மர்மமான முறையில் பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே அவரை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வானூர்,
புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகள் சவிதா (வயது 28). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்த வானூர் தாலுகா பூத்துறை காலனியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தநிலையில், கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோகுல்(7) என்ற மகனும், கனிமொழி(6), பிரியா(3) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில் வெங்கடேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி கருத்துவேறுபாட்டால் பிரிந்து சென்றது சவிதாவுக்கு தெரியவந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவிதா, தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்த வானூர் போலீசார், சவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சவிதாவின் தாய் செல்வாம்பாள், வானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சவிதாவின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில், அவர் தலையில் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுபற்றி கணவர் வெங்கடேசனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சவிதா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று செல்போனில் அடிக்கடி பேசுவதால், வேறு யாருடனாவது கள்ளத்தொடர்பு இருக்கிறதா? என்று சவிதாவிடம் வெங்கடேசன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் சவிதாவின் தலையில் பலமாக தாக்கினார்.
இதில் அவர் உயிரிழந்தார். இதனால் பயந்துபோன வெங்கடேசன், வீட்டின் ஜன்னல் கம்பியில் சவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்து நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்து, வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.