வீடு தேடிவரும் அஞ்சலக வங்கி சேவை திட்டம்: வெளிநாட்டில் இருந்து கணக்கில் பணம் அனுப்ப இயலும்
தபால்காரர் மூலம் வீடுதேடிவரும் அஞ்சலக வங்கி சேவை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் வீரபுத்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் கடந்த 2015–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமரின் சிறப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தில் 19 ஆயிரத்து 962 கணக்குகள் தொடங்கி மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. தற்போது வரை இந்த திட்டத்தில் 42 ஆயிரத்து 770 கணக்குகள் தொடங்கப்பட்டு அனைத்தும் நடப்பில் உள்ளது. 2017–18–ம் ஆண்டில் 83 ஆயிரத்து 60 சேமிப்பு கணக்குகள் தொடங்கி மண்டல அளவில் 2–ம் இடம் பிடித்துள்ளோம்.
கடந்த 2015–16–ம் ஆண்டில் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளோம். கடந்த ஆண்டு விரைவுத்தபால் சேவையில் முதலிடமும், விரைவுத்தபால் வருவாயில் 2–ம் இடமும் ராமநாதபுரம் கோட்டம் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து பொதுமக்களுக்கும் நிதி சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கி அஞ்சல் துறைக்கு வங்கி சேவை அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் கிளைகளையும் ஒருங்கிணைத்து அஞ்சல் வங்கி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தபால்காரர் வாடிக்கையாளரின் வீட்டிற்கே வந்து பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் உதவி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆதார்கார்டு, செல்போன் எண் மட்டும் வழங்கி இதற்கான புதிய கணக்கு தொடங்கி பணபரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதேபோல, இந்தியாவில் உள்ள எந்த வங்கி கணக்கிற்கும் எந்த நேரத்திலும் பணம் செலுத்தவும், பெறவும் முடியும். அனைத்து வகையான பில்களையும் நேரடியாக இருக்கும் இடத்திலேயே செலுத்த முடியும்.
வெளிநாட்டில் இருந்து இந்த திட்டத்தில் கணக்கில் நேரடியாக பணம் அனுப்ப முடியும். குறைந்த பட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவையில்லை. இதற்காக தனியாக ரகசிய குறியீடு கொண்ட கியூ ஆர் கோடு கார்டு வழங்கப்படும். இந்த கார்டின் மூலம் தபால்காரர் கொண்டுவரும் நவீன கையடக்க கருவியில் கைரேகை பதிவு செய்து மட்டுமே பண பரிவர்த்தனை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும் என்பதால் மிகவும் பாதுகாப்பானது.
இந்த புதிய அஞ்சலக வங்கி திட்டம் வருகிற 21–ந் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். அப்போது உதவி சூப்பிரண்டு விஜயகோமதி உடன் இருந்தார்.