தினகரனால் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தினகரனால் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-08-14 23:30 GMT

கீழக்கரை,

கீழக்கரை அலாவக்கரைவாடி நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான முத்துமாரியம்மன் கோவிலில் முப்பெரும் உற்சவ திருவிழா நடந்தது. அதில் பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மீனவர்கள் நிறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் நலனை பாதுகாக்க பா. ஜனதா அரசு பாடுபட்டு வருகிறது. சமீபத்தில் இலங்கையில் வாடிய தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீனவர்களுக்கான் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுதந்திர தின விழாவில் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார். இந்த திட்டத்தில் 6 மாநிலங்கள் சேர்ந்து உள்ளன. தமிழகமும் அதில் இணைய வேண்டும். இதன் மூலம் தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும்

தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஊழல் இல்லாத கட்சியாக திகழ்கிறது. ஆனால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் ஊழல் மிகுந்துள்ளது. சிலை கடத்தல், அண்ணா பல்கலைக்கழக ஊழல் என தமிழகம் ஊழல் மாநிலமாக திகழ்கிறது. தினகரனால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அவரை நாங்கள் கூட்டணிக்கு அழைத்தது போன்று பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சொல்கிறார். நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. திருமுருகன் காந்தி மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுஇருக்கிறார். அவர் தமிழகத்தில் குழப்பத்தை விளைவித்து கொண்டிருக்கிறார் என்பதை அவரை ஆதரிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காரைக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட ஊர்களின் வழியாக புதிய ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதே போன்று கீழக்கரை உள்ளிட்ட ஊர்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வோம். தமிழகத்தில் எது நடந்தாலும், அதற்கு பா.ஜனதா தான் காரணம் என்று பரப்பப்படுகிறது. தி.மு.க.வில் ஸ்டாலின்–அழகிரி பிரச்சினை ஏற்கனவே இருப்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதி இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த பிரச்சினை பெரிதாகி உள்ளது. இதற்கும் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, ‘‘தமிழகம் ஜெயலலிதா–கருணாநிதி இல்லாத அரசியல் களத்தை எதிர்நோக்கி உள்ளது. மக்கள் மனதில் எந்த கட்சி இடம் பிடிக்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும். பா.ஜனதா கட்சி மக்கள் மனதில் இடம் பிடிக்க தீவிரமாக பணியாற்றும். உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்‘‘ என்றார்.

மேலும் செய்திகள்