445 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம்: கலெக்டர் லதா தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம் நடக்கிறது என கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
இன்று சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் மகளிர் திட்டம், முதல்–அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமைவீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்), பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் செயல்படுத்துதல் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள், முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், ஊராட்சியில் செயல்படும் ரேஷன்கடைகளின் செயல்பாடு குறித்து சமூக தணிக்கைக்கு உட்படுத்துதல், அனைவருக்கும் கல்வி இயக்கம், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத கிராமம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எனவே கிராம பொதுமக்கள் அனைவரும் இந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனுள்ள முறையில் விவாதித்து பயனடையலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.