கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் கேட்ட மனு நிராகரிப்பு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை நகலை வழங்க கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-15 00:00 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரித்து முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் உள்ள 3 பேரின் காவல் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மூவரும் நேற்று விருதுநகர் 2– வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். மூவருக்கும் காவலை வருகிற 28– ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து 3 பேரும் மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதற்கிடையே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு கருப்பசாமியின் சார்பில் வக்கீல் மணி மனுதாக்கல் செய்தார். அதனை மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி விசாரித்தார். அவர், வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதியான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு நகல் வழங்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் செய்திகள்