ஓய்வு பெற்ற என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 57 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை
மதுரையில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 57 பவுன் நகைகள், ரூ.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
மதுரை,
மதுரை மகாத்மா காந்தி நகர், நர்மதா தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 67). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வாகைக்குளத்தில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாயுடன் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன.
மேலும் பீரோவில் வைத்திருந்த 57 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 5 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகாத்மாகாந்தி நகரில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.