புதுவையில் பயங்கரம்: என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை

புதுவை முத்தியால்பேட்டையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-15 00:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ஆர்.கே.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் நாகராஜன் (வயது38). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று மாலை நாகராஜன் டியூசனுக்கு கொண்டு போய் விடுவதற்காக தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். வீட்டில் இருந்து சில அடிதூரம் சென்ற நிலையில் அவரை மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் நிலைதடுமாறி நாகராஜன் மற்றும் அவருடைய குழந்தைகள் மோட்டார் சைக்கிளில் இருந்து நடுரோட்டில் கீழே விழுந்தனர். உடனே அந்த கும்பல் நாகராஜனை சுற்றி வளைத்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.

அப்போது அவர்களிடம் இருந்து தப்பித்து தனது வீட்டை நோக்கி நாகராஜன் ஓடினார். அந்த மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டிச் சென்று வீட்டின் நுழைவு வாயில் அருகே வைத்து அவரை சரமாரியமாக வெட்டினார்கள். இதில் நாகராஜன் உடல் முழுவதும் வெட்டுக்காயமடைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த நாகராஜனை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணியளவில் நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து புதுச்சேரி சட்டம்–ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இந்த பயங்கர கொலை குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு நாகராஜனை வெட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகராஜன் வசித்து வந்த பகுதியில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா தொடர்பான ஏற்பாடுகளில் நாகராஜன் மும்முரமாக செயல்பட்டார். இது அதே பகுதியை சேர்ந்த சிலருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து நாகராஜனை தீர்த்துக்கட்டியதும் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்ததுள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே நாகராஜனின் உறவினர்கள் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு கல்லூரி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நாகராஜனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுவை மாநிலம் முழுவதும் சுதந்திர தினவிழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் நாகராஜன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்