100-வது ஆண்டு விழாவையொட்டி சென்னை அருகே வன மரபியல் மரப்பூங்கா நாளை திறக்கப்படுகிறது
கொளப்பாக்கத்தில் வன ஆராய்ச்சி பிரிவின் 100-வது ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வன ஆராய்ச்சி பிரிவு 1919-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் மர மேம்பாடு, தரிசு நில மரம் வளர்ப்பு குறித்த ஆராய்ச்சி, யூகலிப்டஸ், சவுக்கு, மூங்கில் போன்ற இனங்களில் வீரிய ரக தேர்வு மற்றும் உற்பத்தி, மூலிகை பயிர் மேம்பாடு, உயிர் உர உற்பத்தி போன்ற ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்து இந்த பிரிவு மேற்கொண்டு வருகிறது. அழிந்து வரும் அரிதான மர இனங்களை மீட்டெடுத்தல், தேக்கு போன்ற தடி மர வகைகளின் ஒட்டுமுறை நுட்பம், பாறை நிலம், மாசடைந்த நிலம், மண் வளம் குன்றிய நிலம் போன்றவற்றில் மரம் வளர்ப்பு தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
வன ஆராய்ச்சி பிரிவின் 100-வது ஆண்டு விழா நாளை காலை கொளப்பாக்கத்தில் நடைபெறுகிறது. விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று வன மரபியல் வள மரப்பூங்காவை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் உள்ள 300 வகையான மரங்களை கொண்டு “வன மரபியல் வள பூங்கா” நிறுவப்படும் என்று ஜெயலலிதா 11.2.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் தற்போது அந்த மரப்பூங்கா தொடக்கப்படவுள்ளது.
இந்த தகவலை வனத்துறை வெளியிட்டுள்ளது.