சுற்றுலா வாகன உரிமையாளர் வீட்டில் 6½ பவுன் நகைகள் திருட்டு
தேனி அருகே சுற்றுலா வாகன உரிமையாளர் வீட்டில் 6½ பவுன் நகைகள் திருட்டு. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அல்லிநகரம்,
தேனி பொம்மையகவுண்டன்பட்டி நேருஜி சாலையை சேர்ந்த தர்மர் மகன் சுபாஷ் (வயது 39). இவர் சுற்றுலா வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கடந்த 11-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலையில் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் கதவை திறந்து உள்ளோ சென்ற போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் இரும்பு பெட்டகம் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 ஜோடி கம்மல், ஒரு நெக்லஸ், 3 மோதிரங்கள் என மொத்தம் 6½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. பூட்டிய வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.