அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் நடிகர் ரஜினிகாந்த் பேசுவதா?
“அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் நடிகர் ரஜினிகாந்த் பேசுவதா?“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க. தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதற்கு, அண்ணாவின் இதயக்கனியாக விளங்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்பதை அண்ணா நன்கு அறிந்து இருந்தார். எனவேதான் அண்ணா, எம்.ஜி.ஆரிடம் ‘தம்பி வா, தலைமை ஏற்க வா, உனது முகத்தை காண்பித்தாலே 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும்’ என்று கூறினார். ஆனால் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை பற்றி அண்ணா அவ்வாறு கூறவில்லை.
எம்.ஜி.ஆர். தனக்கு போட்டியாக வருவார் என்று கருதி, அவரை புரிந்து கொள்ளாமல் கருணாநிதி உதாசீனப்படுத்தினார். மேலும் கருணாநிதி தன்னுடைய மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கினார். ஆனால் மக்களின் ஆதரவு எம்.ஜி.ஆருக்கே இருந்தது. பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசிய பின்னர், கருணாநிதி பேசுவதற்கு முன்பாக மக்கள் கலைந்ததால், கட்சியில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கினார் கருணாநிதி. இதனால்தான் அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். எனவே கருணாநிதிக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.
அப்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் இல்லை. அவர் அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் பேசுகிறார். அவர் அ.தி.மு.க.வின் வரலாற்றினை தெரிந்து கொண்டு பேச வேண்டும். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல், ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் ஒரு நாள் அரசு பொது விடுமுறை வழங்கி, ஒரு வாரம் அரசு நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து, துக்கம் அனுசரித்து உள்ளது.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வினர் நன்றி கூற வேண்டும். தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்திலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இருக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 11 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்துள்ளனர். வருகிற 31-ந்தேதிக்குள் 1½ கோடி தொண்டர்களின் எண்ணிக்கையை தாண்டி, அ.தி.மு.க. சாதனை படைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.