கணவனை கொன்று ஆற்றில் புதைத்த பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

கணவனை கொன்று ஆற்றில் புதைத்த பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-08-14 22:15 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 40).விவசாயி. இவருடைய மனைவி முத்துலெட்சுமி(வயது35). கணேசனுக்கும் அவரது மனைவி முத்துலெட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துலெட்சுமி தனது கணவனை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதன்படி முத்துலெட்சுமி கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி தனது தங்கையின் தங்கையின் கணவர் ரமேஷ்(33) மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கணேசனை பஸ்சில் கடத்தி சென்று பட்டுக்கோட்டை அருகே உள்ள வெண்டாக்கோட்டை நசுவினி ஆற்றில் வைத்து கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில் புதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ரமேஷ் கிராம அதிகாரியிடம் சரண் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை போலீசார் முத்துலெட்சுமி, ரமேஷ் மற்றும் ரமேஷின் நண்பர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும் ஆற்றில் புதைக்கப்பட்ட கணேசன் உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முத்துலெட்சுமி, ரமேஷ், மற்றும் ரமேஷின் நண்பர்கள் 2 பேர் மீது பட்டுக்கோட்டை கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பட்டுக்கோட்டை 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.ரவீந்திரன் குற்றம் சாட்டப்பட்ட முத்துலெட்சுமி, ரமேஷ் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ரமேஷின் நண்பர்கள் 2 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்