சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாடுகள்: கடற்கரை சாலையில் வாகனங்களை நிறுத்த தடை
புதுவையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கடற்கரை சாலை பகுதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் சுதந்திர தினவிழா உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. காலை 9 மணிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சுதந்திர தினவிழாவினையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விழா நடக்கும் உப்பளம் மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் புதுவை நகரப்பகுதியில் இரவு பகலாக வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்கிடமாக திரிபவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணைக்குப் பின்னரே விடுவிக்கின்றனர்.
புதுவை கவர்னர் மாளிகை, சட்டசபை, மற்றும் தலைவர்களின் சிலைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தேசியக்கொடி, மற்றும் தேசியக்கொடியுடன் கூடிய உடைகளின் விற்பனையும் சூடுபிடித்தன.
இந்தநிலையில் சுதந்திர தின விழா ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, டி.ஐ.ஜி. சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
*விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வைத்துள்ளவர்கள் வம்பாகீரப்பாளையம் சாலை வழியாக விழாத்திடலுக்கு வரவேண்டும்.
*கார் அனுமதி பெற்ற வாகனங்கள் வம்பாகீரப்பாளையம் சாலை வழியாக வந்து விழா நடக்கும் மைதானத்தில் வடக்கு பக்கம் கதவு எண்–1 வழியாக உள்ளே வந்து தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.
*கார் அனுமதி பெறாத அழைப்பாளர்களின் வாகனங்கள் அனைத்தும் வம்பாகீரப்பாளையம் சாலையில் விழா நடக்கும் மைதானத்துக்கு தெற்கு பக்கம் உள்ள கதவு எண்–2 அருகில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்.
*அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது இருசக்கர வாகனங்களை வம்பாகீரப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நிறுத்த வேண்டும்.
*கைப்பை, உணவுப்பொருட்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கேமரா மற்றும் செல்போன்களுக்கு அனுமதியில்லை.
*அழைப்பிதழை பரிசீலனை செய்த பிறகே விழாவிற்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவர்.
*பாதுகாப்பு கருதி சோதனை செய்யும்போது காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
*கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் நாளை காலை 6 மணிமுதல் பகல் 1.30 மணிவரையிலும், மதியம் 4 மணிமுதல் மறுநாள் காலை 7.30 மணிவரை சைக்கிள் உள்பட வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது.
*கடற்கரை சாலை, தூமாஸ் வீதி மற்றும் பாரதி பூங்கா, கவர்னர் மாளிகையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களை தவிர எந்த வாகனங்களும் நிறுத்தக்கூடாது. மாறாக புதுவை சட்டப்பேரவை மற்றும் பொது மருத்துவமனைக்கு மேற்கே உள்ள மூடப்பட்டுள்ள பெரிய வாய்க்காலின் மீது நிறுத்தப்பட வேண்டும்.
*சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழாவிற்கு வரும் பொதுமக்கள் விழா நடக்கும் இடத்திலும், கடற்கரை சாலையிலும் மற்றும் பாரதி பூங்கா அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குப்பை மற்றும் இதர பொருட்களை வீசி எறிய வேண்டாம்.
இவ்வாறு அதில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.