விமான கண்காட்சியை பெங்களூருவிலேயே நடத்த வேண்டும்

விமான கண்காட்சியை தொடர்ந்து பெங்களூருவிலேயே நடத்த வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-13 21:54 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் மேயர் சம்பத்ராஜ் தலைமையில் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர் பத்மாவதி, மாநகராட்சி கமிஷனர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநகராட்சி சார்பில் பதில் அளிக்கப்பட்டன. அந்த பதிலில் தனக்கு திருப்தி இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது:-

சட்டவிரோத விளம்பர பலகைகள் குறித்து ஆய்வு செய்து விவரங்களை சேகரிக்க 264 குழுக்களை மாநகராட்சி அமைத்தது. ஆயினும் நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் குறித்து ஒரு தெளிவான விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் கேட்டு இருந்தேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் சரியான, முழுமையான பதிலை வழங்கவில்லை.

அதிகாரிகள் சரியான முறையில் பணியாற்றவில்லை. அதன் காரணமாக தான் ஐகோர்ட்டு தலையிட்டு, சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றியதற்கு ஆன செலவு விவரங்களை நான் கேட்டேன். ஆனால் மொத்தம் உள்ள 8 மண்டலங்களில் 3 மண்டலங்களுக்கு மட்டுமே விவரங்களை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். 3 மண்டலங்களில் மட்டும் விளம்பர பலகைகளை அகற்ற ரூ.63 லட்சம் செலவாகி இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இதில் முறைகேடு நடந்துள்ளது.

4 மண்டலங்களில் அகற்றப்பட்ட விளம்பர பலகைகள் மற்றும் இரும்பு கம்பிகளை ஏலம் விட்டத்தில் ரூ.12.36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெங்களூருவில் விளம்பர பலகைகள் வைக்க ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பா.ஜனதா வரவேற்கிறது. நகரில் விளம்பர பலகைகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கோரிக்கை ஆகும். இதை எங்கள் கட்சியின் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதை இந்த சபையில் கூறி இருக்கிறேன்.

பெங்களூருவில் சட்டவிரோதமாக 10 ஆயிரம் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த விளம்பர பலகைகளின் உரிமையாளர்களிடம் இருந்து உரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பத்மநாபரெட்டி பேசினார்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விமான கண்காட்சியை தொடர்ந்து பெங்களூருவிலேயே நடத்த வேண்டும் என்றும், பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தை விட்டுக்கொடுத்த ராணுவத்துறைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்