கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் நீரை குழாய் மூலம் கொண்டு வந்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்

காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் நீரை குழாய் மூலம் கொண்டு வந்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி விவசாயிகள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-08-13 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 235 மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் அரவக்குறிச்சி, போத்துராவுத்தன்பட்டி, கடவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தற்போது மேட்டூர் அணை 2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்கிறது. இந்த நீரை குழாய் மூலம் கொண்டு வந்து கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களிலும், பஞ்சப்பட்டி ஏரியிலும் நிரப்பினால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும், என்று கூறப்பட்டு இருந்தது.

கடவூர் தாலுகா வாழ்வார்மங்கலம் அப்துல்கலாம் அறக் கட்டளை சார்பில் இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள வெள்ளக்குளத்தில் நீரை சேமித்து வைக்க எந்தவித வழிவகையும் செய்யப்படாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் ஊர் பொதுமக்கள் வெள்ளக்குளம் மற்றும் அதன் வரத்து வாய்க்காலை தூர்வாரி கரையோரமாக பனைமரக்கன்று நடுவதற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.கரூர் மாவட்டம் எஸ்.வெள்ளாளப்பட்டி நரிகட்டியூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், காந்தி கிராமம் மற்றும் சணப்பிரட்டி பகுதியில் உள்ள நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து, பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா சாலப்பட்டி, முனையனூர், மணவாசி, பூஞ்சோலைபுதூர், கோரகுத்தி, நத்தமேடு, மேட்டாங்கிணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள கோரகுத்தியில் ஊறுகாய் உற்பத்தி செய்யும் ஒரு தனியார் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இயங்குகிறது. ஊறுகாய் தயாரிக்கும்போது ஏற்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், அந்த நிறுவனத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஊறுகாய் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். அதனை மூடுவதற்கு கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த ஊறுகாய் நிறுவனத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அங்குள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் திரண்டு வந்து கொடுத்த மனுவில், கரூரில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழா கிராமசபை கூட்டத்தில் இதுவரை நடந்த வரவு-செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். கிராம நலன் கருதி மக்கள் வைக்கும் கோரிக்கைகளை தீர்மானங்களாக பதிவு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இருந்தனர்.

கரூர் மாவட்ட பா.ம.க.வினர் திரண்டு வந்து கொடுத்த மனுவில், கரூர் காவிரி ஆற்றில் அதிகப்படியான நீர்வரத்து உள்ளபோதும், மண்மங்கலம் தாலுகா பாசன வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. அங்குள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளியதால் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதே இதற்கு காரணம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பா சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகையில் வாங்கல் நெரூர் ராஜவாய்க்கால் ஆயக்கட்டு கடைமடை பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம், ஆதிதிராவிடர் நல அதிகாரி ஜெ.பாலசுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்