தென்மேற்கு பருவமழை தீவிரம்: பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், நகராட்சி கமி‌ஷனர் வேண்டுகோள்

தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) முருகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-13 22:15 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதையடுத்து கோட்டூர் ரோடு, மரப்பேட்டை உள்ளிட்ட நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தேங்கி நின்ற மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதேபோன்று சாக்கடை கால்வாய் செல்லும் மரப்பேட்டை, கண்ணப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்தது. இந்த பணிகளை நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) முருகேசன் கூறியதாவது:–

பொள்ளாச்சியில் விடிய, விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழைநீரை வடிகட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதை தவிர மரப்பேட்டை, கண்ணப்ப நகர், கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கவும், மழைநீர் சீராக செல்ல தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். மழைக்கால சேதங்களை தடுக்க நகராட்சி மூலம் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மழைக்காலத்தில் ஏற்படும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மழைநீர், நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீரை மூடி வைக்க வேண்டும். சாதாரண காய்ச்சல் வந்தால் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்