ரூ.15 லட்சத்தில் தூர்வாரியதாக கூறப்படும் ஏரியை காணவில்லை கலெக்டரிடம் கொடுத்த மனுவால் பரபரப்பு

மணப்பாறை தாலுகா வையம்பட்டி அருகே ரூ.15 லட்சத்தில் தூர்வாரியதாக கூறப்படும் கருங்குளம் ஏரியை காணவில்லை என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-13 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது மணப்பாறை தாலுகா வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் செக்கணம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் தலைமையில் வந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பழைய கோட்டை மற்றும் செக்கணம் ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கருங்குளம் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி மிகவும் பழமையானதாகும். இந்த ஏரியின் மூலம் சுமார் 125 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. பொன்னணியாறு அணையில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதற்கான வரத்து வாய்க்கால்கள் உள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த ஏரி தற்போது காணாமலேயே போய்விட்டது. இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. ஆனால் இந்த ஏரியை ரூ.15 லட்சம் செலவில் தூர்வாரியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன ஏரியை கண்டு பிடித்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றை காணவில்லை என அலறிய படி போலீஸ் நிலையத்திற்கு வந்து மனு கொடுக்கும் காட்சி அதனை பார்ப்போரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும். அந்த காட்சியை நினைவு படுத்தும் வகையில் ஏரியை காணவில்லை என கூறி விவசாயிகள் மனு கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த சர்வ கட்சி குழுவினர் பழனியப்பன், தொப்பி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, கோவிலுக்கு செல்லும் பாதையில் கக்கன் காலனியில் உள்ள மதுபான கடையையும், நவல்பட்டு சாலையில் பள்ளி நுழைவு வாயில் அருகில் உள்ள மதுபான கடையையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் அதன் நிறுவனர் ரஞ்சித் குமார் தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் திருச்சியில் ராக்கின்ஸ் சாலை, ரெனால்ட்ஸ் சாலை போன்றவை இன்னும் ஆங்கிலேய அதிகாரிகளின் பெயரிலேயே உள்ளன.

இந்த பெயர்களை அகற்றி நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ஜெய் ஹிந்த் செண்பகராமன், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற தியாகிகளின் பெயர்களை சூட்டி கவுரவிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

நவல்பட்டு சிலோன் காலனியை சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட தனது 28 வயது மகள் சிவகாமியின் நிலையை கருத்தில் கொண்டு மாதாந்திர உதவி தொகை வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

முசிறி அருகே உள்ள அந்தரப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த கனகேஸ்வரி என்ற பெண் கலப்பு திருமணம் செய்ததால் திருச்சி கோர்ட்டில் அரசு வேலை பெற்று பணியாற்றி வரும் ராஜா என்பவர் தன்னையும், தனது இரண்டு குழந்தைகளையும் கைவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 350 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

மேலும் செய்திகள்