கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி முன்எச்சரிக்கை நடவடிக்கை

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2018-08-13 23:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இதைத்தொடர்ந்து அந்த அணைகளில் திறந்துவிடப்படும் உபரி நீர் மேட்டூர்் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

அவ்வாறு அணைக்கு வரும் தண்ணீர் திடீரென 1.25 லட்சம் கன அடி அதிகரித்த நிலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் கர்நாடக அரசு திறந்து விட்ட உபரி நீர் அப்படியே மேட்டூர்் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டது.

இதில் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடகத்தில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட அதிக அளவு தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கு வந்து சேர்ந்தது.

முக்கொம்பு அணையில் இருந்து நேற்று காலை கொள்ளிடம் ஆற்றில் 79 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆக மொத்தம் 1 லட்சத்து் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீராக கரைபுரண்டு ஓடுகிறது.

ஆண்டின் மொத்த நாட்களும் மணல் வெளியாக காட்சி அளித்த கொள்ளிடம் ஆறு இரு கரைகளையும் தொட்டு கொண்டு தண்ணீர் பாய்ந்தோடிக் கொண்டிருக் கிறது. கொள்ளிடத்தின் இரு கரையிலும் உள்ள தஞ்சை, திருச்சி மாவட்ட மக்கள் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்காமல் இருக்கவும், அந்தப்பகுதிகளில் தண்ணீர் உட்புகாமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் கொள்ளிட கரையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல, பூண்டி, செங்கரையூர் பாலத்தின் அருகில் அலமேலுபுரம் பூண்டி வடிகால் வாய்க்கால் வழியாக, கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுக்க பொதுப்பணித்துறை ஊழியர்கள் கரைகளில் மணல் மூட்டைகள் அடுக்கி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்