புளியந்தோப்பில் உடைந்த குப்பை தொட்டிகளால் துர்நாற்றம்; நோய் பரவும் அபாயம்
புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் உள்ள உடைந்த குப்பை தொட்டிகளால் கழிவுகள் வெளியேறி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகளில் பெரும்பாலானவை சேதமடைந்த நிலையில் உள்ளதாக கடந்த ஜூன் 13–ந்தேதி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக மிகவும் பழுதடைந்த குப்பை தொட்டிகள் மாற்றபட்டு புதிய குப்பை தொட்டிகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டன. எஞ்சி இருக்கும் பழுதடைந்த குப்பை தொட்டிகளும் விரைவில் மாற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. உடைந்த குப்பை தொட்டிகளே பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
உடைந்த குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் வெளியே சிதறி கழிவுகள் சாலையில் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும் உணவுகள் கிடைக்குமா என கால்நடைகள் குப்பைகளை வெளியே இழுத்து போடுவதால், சிதறும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே பழுதடைந்த அனைத்து குப்பை தொட்டிகளையும் மாற்றிவிட்டு, புதிய குப்பை தொட்டிகளை பயன்பாட்டிற்கு வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.