பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

மகாதேவப்பட்டினத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-13 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மகாதேவப்பட்டினம் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மன்னார்குடி அருகே உள்ள மகாதேவப்பட்டினம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த ஓராண்டாக செயல்படாமல் உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்குழாய் கிணற்றில் மண் சரிந்து பழுதடைந்து போனதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்ற அவலநிலை இருந்து வருகிறது. எனவே மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்