சதுரகிரி மலையில் திடீர் தீ விபத்து: பக்தர்கள் மலை ஏற தடை

மதுரை மாவட்டம் சாப்டூர் சதுரகிரி மலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-08-13 21:45 GMT

பேரையூர்,

மதுரை மாவட்டம் சாப்டூர் வனசரகத்தில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. அங்குள்ள மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் மலைமீது ஏறிச் சென்று வழிபட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சதுரகிரி கோவிலில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் மலை உச்சியில் உள்ள தவசி பாறை பகுதியில் திடீர் என்று தீப்பிடித்தது.

கோரைப்புற்கள் உள்ள பகுதி என்பதால் தீ மளமளவென்று பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து உடனே வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 44 பேர் விரைந்து சென்று, போராடி தீயை அணைத்தனர். 20 ஏக்கர் பரப்பளவுக்கு இந்த காட்டுத்தீயால் பாதிப்பு ஏற்பட்டது.

தீ விபத்து காரணமாக பாதுகாப்பு கருதி தாணிப்பாறை அடிவாரத்தில் மதியம் 12 மணியில் இருந்து பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்