பேரையூர் அருகே சரணாலயத்தை அழித்து மணல் திருட்டு. கிராம மக்கள் புகார்
பேரையூர் அருகே சரணாலயத்தை அழித்து மணல் திருட்டு நடப்பதாக கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை மாவட்டம், எழுமலை கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் அதிக அளவில் மணல் கொள்ளை நடக்கிறது. குறிப்பாக எழுமலை, பண்டாரி, குடிச்சேரி, வையூர், எழுமலை பெரிய கண்மாய், சாப்டூர், கரிசல் கண்மாய், கிருஷ்ணாபுரம், அணைக்கரைப்பட்டி, பண்டாரி, சின்னரெட்டி, மங்கள்ரேவ், எஸ்.பாலப்பட்டி, பெரிய சித்தூர்ரெட்டி ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளை பெரும் தொழிலாக நடக்கிறது. சுமார் 30 அடி ஆழம் வரை தோண்டி மணல் அள்ளுகின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் தான் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. முன்பெல்லாம் இங்கு வெளிநாட்டு பறவைகள் வரும். ஆனால் லாரிகளில் மணல் திருட்டு நடப்பதால், இந்த சத்தத்திற்கு பறவைகள் வருவதில்லை. இந்த சரணாலயம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மணல் கடத்தல் அமோகமாக நடக்கிறது. இதற்கு பேரையூர் தாசில்தாரும் உடந்தையாக இருக்கிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலை தடுத்து சரணாலயத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
மதுரை மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கண்மாய் மண்ணை எடுத்து சட்டவிரோதமாக சாலைப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். வீரபாண்டி ஊராட்சி, சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம், மஞ்சம்பட்டி, ஆலாத்தூர், இரணியம், பேச்சிக்குளம், பூதகுடி, கொடிமங்கலம், கருவனூர் ஆகிய ஊராட்சிகளில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.6 கோடிக்கு சாலை பணிகள் நடந்துள்ளன.
இந்தப் பணிகளுக்கு பூதகுடி, கீழப்பணங்காடி, இரணியம், இலுப்பகுடி, கண்ணிக்குளம், மாரணவாரியேந்தல், கூலப்பாண்டி, வீரபாண்டி, ஆலத்தூர், அய்யர்பங்களா ஆகிய கண்மாய்களில் இருந்து விவசாயத்திற்கு மண் எடுப்பதாக கூறி சாலை பணிகளுக்கு மண் எடுத்தனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.