திருச்சி அருகே காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 100 ஏக்கர் வாழைத்தோட்டம் மூழ்கியது

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருச்சி அருகே உத்தமர்சீலி பகுதியில் சுமார் 100 ஏக்கர் வாழைத்தோட்டம் தண்ணீரில் மூழ்கியது. தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோடியது. கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-13 23:15 GMT
திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியதால், அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நேற்று முன்தினம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் வந்தது. இந்த தண்ணீரானது முக்கொம்பில் இருந்து காவிரியில் 30 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 90 ஆயிரம் கன அடியும் திறந்து விடப்பட்டது. இதனால் திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் கரைகளை தொட்டபடி பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காவிரியில் திடீரென வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று காலை திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை, பொன்னுரங்கபுரம், பனையபுரம், உத்தமர்சீலி, நடுவெட்டி, கவுத்தரச நல்லூர், கிளிக்கூடு ஆகிய கிராமங்களில் காவிரியில் பெருக் கெடுத்து ஓடிய தண்ணீர் கரையை விட்டு வெளியேறி படுகையில் உள்ள வாழைத்தோட்டங்களில் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் நீரில் மூழ்கின. சுமார் 4½ அடி அளவிற்கு அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த கிராமங்களின் வடகரையில் கொள்ளிடமும், தென் கரையில் காவிரியும் செல்கின்றன. கொள்ளிடத்தை விட காவிரி ஆறு சற்று மேடான நிலையில் இருப்பதால், வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றில் சென்று கலப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை இந்த தரைப்பாலத்திலும் தண்ணீர் வழிந்தோடியது.

தரைப்பாலத்தில் வழிந்தோடிய தண்ணீர் திருச்சி- கல்லணை சாலையில் சுமார் ஒன்றரை அடி அளவிற்கு சென்றதால் அந்த சாலையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சென்றவர்கள் மிகவும் சிரமத்துடன் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள முத்துக்கருப்பசாமி கோவிலையும் தண்ணீர் சூழ்ந்து நின்றது.

இந்நிலையில் நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி உத்தமர்சீலி பகுதிக்கு சென்று காவிரி படுகையில் வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தோப்பு மற்றும் பயிர்களை பார்வையிட்டார். அவருடன் ஸ்ரீரங்கம் தாசில்தார் கனக மாணிக்கமும் சென்று இருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர், முக்கொம்பில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை முக்கொம்பில் இருந்து காவிரியில் வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டது. கொள்ளிடத்தில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கொள்ளிடத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நேற்று காலை தண்ணீர் அதிக சீற்றத்துடன் சென்றது. கொள்ளிடம் புதிய பாலம் அருகில் இருந்த குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த குடிசைகளில் வசித்தவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடி சென்றனர். 

மேலும் செய்திகள்