கால்நடை தீவனப்பயிர் வளர்க்க மானியம்: கலெக்டர் தகவல்
கால்நடை தீவனப்பயிர் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 6 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய கீழ்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி இறவையில் பல்லாண்டு உயர்ரக கலப்பின கம்பு நேப்பியர் தீவனப்புல் 100 ஏக்கரில் சாகுபடி செய்திட 100 சதவீத மானியத்தில் புல் கரணைகள் வழங்கப்படுகிறது. இறவையில் 200 ஏக்கரில் 100 சதவீத அரசு மானியத்தில் தீவனச்சோளம் மற்றும் வேலி மசால் பயிரிட தீவன விதைகள் வழங்கப்படுகிறது.
மானாவாரியில் 3ஆயிரம் ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் தீவனச்சோளம் மற்றும் தீவன தட்டைப்பயறு சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்கப்படவுள்ளது. மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்ஸ் ) பசுந்தீவன வளர்ப்புத்திட்டத்தில் 75 சதவீத மானியத்தில் 100 அலகுகள் அமைக்கப்படுகிறது. 75 சதவீத அரசு மானியத்தில் மின்சாரத்தினால் இயங்கும் 40 புல் வெட்டும் கருவிகள் வழங்கப்படவுள்ளது. கால்நடை பண்ணைகள் மூலம் 40 ஆயிரம் தீவன மரக்கன்றுகள் வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டங்களில் பயன்பெற ஏற்கனவே இந்த திட்டங்களில் பயன்பெற்றிருத்தல் கூடாது. அனைத்து திட்டங்களிலும் 30 சதவீதம் ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவர். சிறு மற்றும் குறு விவசாயிகள், தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விருதுநகரிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்திதிட்ட துணை இயக்குனர் மற்றும் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள கால்நடைத்துறை உதவி இயக்குனர்களையும் அணுகலாம். இவ்வாறு கூறியுள்ளார்.