ராமநாதபுரம் அருகே அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக மணல் எடுப்பு, 14 கிராம மக்கள் போராட்டம்

ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை பழனிவலசை பகுதியில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக மணல் எடுப்பதாக கூறி 14 கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-13 23:45 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பழனிவலசை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களை சிலர் விலைக்கு வாங்கி அந்த இடத்தில் தமிழ்நாடு சிறு கனிம விதிகள் 1959ன் கீழ் புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை அனுமதி பெற்று நீண்டகாலமாக சவடு மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் அரசு அனுமதித்ததை விட ராட்சத பள்ளங்கள் தோண்டி மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனராம். இதனையறிந்த பழனிவலசை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள 14 கிராம மக்கள் சம்பந்தப்பட்ட மணல் குவாரி உரிமையாளரிடம் நேரில் சென்று அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மணல் அள்ளி வந்ததால் சித்தார்கோட்டை பகுதியை சேர்ந்த இந்து ஐக்கிய மகாசபை சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் இந்து ஐக்கிய மகா சபை தலைவர் கணபதி, பழனிவலசை கிராம தலைவர்கள் பூமிநாதன், முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் 14 கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் சவடு மண் குவாரி நடைபெறும் இடத்துக்கு சென்று மணல் அள்ளிய பள்ளத்துக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த 5 டிராக்டர்களையும் முற்றுகையிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்டநேரமாக கோ‌ஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்ததும் தேவிபட்டினம் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து வாழும் கலை ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன் என்பவர் கூறியதாவது:–

 பழனிவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்னந்தோப்புகள் உள்பட விவசாயம் பசுமையாக செழித்து காணப்பட்டது. இந்த நிலையில் இத்தகைய தோப்புகளை அதிக விலைக்கு வாங்கி சவடு மண் குவாரிக்கான அனுமதி பெற்று இரவு பகலாக இப்பகுதியில் மணல் அள்ளிச்செல்கின்றனர். அரசு அனுமதித்துள்ள ஆழத்தை விடவும் பல மடங்கு பள்ளம் தோண்டி மணல் அள்ளுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மணல் அள்ளப்படும் இடங்கள் அனைத்தும் ராட்சத பள்ளங்களாக காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த மணல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுதொடர்பாக கிராம தலைவர் பூமிநாதன் கூறும்போது, அரசு அனுமதி அளித்ததை காட்டிலும் அதிகளவு மணலை இரவு பகல் பாராமல் அள்ளிச்செல்கின்றனர். அதனை தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்