வாலாந்தரவை பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் எரிவாயு குழாய்களை அகற்ற வலியுறுத்தல்

மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சி பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் எரிவாயு குழாய்களை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

Update: 2018-08-13 23:30 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் மற்றும் தெற்குக்காட்டூரை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் நடராஜனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சி தெற்குக்காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் அப்பகுதியில் அரசு மற்றும் தனியார் நிலத்திற்கடியில் ஏராளமான குழாய்கள் பதிக்கப்பட்டு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எரிவாயு எடுத்துச்செல்கின்றனர். இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு எரிவாயு மற்றும் எண்ணைய் கசிந்து வெளியாகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் நடமாடக்கூடிய சாலை அருகில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பொருட்படுத்தாமல் 4 மணி நேரம் கழித்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு கியாஸ் வால்வை அடைத்தனர்.

மேலும் இப்பகுதியில் பல இடங்களில் சுமார் 1½ அடி ஆழத்தில் மட்டுமே எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மெத்தனப்போக்கினால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. இதேபோல கிராமத்தை சுற்றிலும் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களால் இயற்கை மாசுபட்டு மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டு அழிந்து வருவதுடன் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் வாழமுடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இதுவிசயத்தில் உடன் நடவடிக்கை எடுத்து வாலாந்தரவை ஊராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் நலன் கருதி ஓ.என்.ஜி.சி. மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் குழு அமைத்து விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றிவிட்டு அரசு புறம்போக்கு மற்றும் பயன்பாடற்ற இடங்களில் குழாய்களை பதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்