தூத்துக்குடி தொழில் அதிபரிடம் ரூ.23 லட்சம் மோசடி; ஒருவர் கைது
தூத்துக்குடி தொழில் அதிபரிடம் இருந்து 2 லாரிகளை வாங்கி கொண்டு ரூ.23 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சிதம்பரநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் அலெக்ஸ் விமல்ராஜ் (வயது 43). தொழில் அதிபரான இவர் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தன்னிடம் உள்ள 2 லாரிகளை விற்பனை செய்ய முடிவு செய்து, அதற்காக இணையதளத்தில் விளம்பரம் செய்து இருந்தார். இதனை பார்த்த சேலத்தை சேர்ந்த செந்தில் (34) என்பவர் அலெக்ஸ் விமல்ராஜை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஒரு லாரி ரூ.15 லட்சத்து 40 ஆயிரத்துக்கும், மற்றொரு லாரி ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் என மொத்தமாக ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த மே மாதம் செந்தில் முன்பணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தார். அதன் பின்னர் அதே மாதத்தில் ஒரு நாள் அவர் தூத்துக்குடிக்கு வந்து 2 லாரிகளையும் வாங்கி கொண்டு, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்ததாகவும், மீதி ரூ.22 லட்சத்து 90 ஆயிரத்தை ஒரு வாரத்தில் கொடுத்து விடுவதாகவும் கூறிவிட்டு சென்றார்.
ஆனால் ஒரு வாரத்துக்கு பின்னர் செந்தில் பாக்கி பணம் கொடுக்கவில்லை. இதனால் அலெக்ஸ் விமல்ராஜ் இதுகுறித்து செந்திலிடம் கேட்ட போது, அவரும், மனைவி சபீனா சுல்தானா (28), உறவினர்கள் சேக் ரபீக் (32), சிவக்குமார் (48) மற்றும் ஒருவர் சேர்ந்து அலெக்ஸ் விமல்ராஜிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அலெக்ஸ் அமல்ராஜ் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் செந்தில், சபீனா சுல்தானா, சேக் ரபீக், சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் பதிவு செய்தனர். இதில் சேக் ரபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.