அனந்தசாகரம் ஏரியை நிரப்பக்கோரி விவசாயிகள் கோ‌ஷம்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, அனந்தசாகரம் ஏரியை நிரப்பக்கோரி விவசாயிகள் கோ‌ஷமிட்டதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-13 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பவானி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுப்பதற்காக நேற்று கலெக்டர் அலுவலகம் வளாகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்த போலீசார் அவர்களை கலைந்து போகும்படி கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் 12–ந் தேதி தடப்பள்ளி –அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை நம்பிதான் அனந்தசாகரம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் 450 ஏக்கர் நிலமும், எஸ்.எம்.ஐ.பி. கிளை வாய்க்கால் மூலம் 350 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த மாதம் 12–ந் தேதி தடப்பள்ளி –அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டும், இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தடப்பள்ளி –அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து அனந்தசாகரம் வழியாக வரும் கிளை கால்வாய்கள் தூர்வாரப்படாததும், பழுது ஏற்பட்டு உள்ள சுமார் 250 மதகுகளை சரி செய்யாததும் ஆகும். இதுகுறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவசர தேவையாக கீழ்பவானி வாய்க்காலில் நல்லாம்பட்டி என்னும் இடத்தில் உள்ள மதகை திறந்து அனந்தசாகரம் ஏரியை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர் பொதுமக்களுக்கு சுடுகாடு இல்லை. தற்காலிகமாக கதிரம்பட்டி செல்லும் ரோட்டில் சிந்தன்குட்டை அருகே உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சுடுகாடு ரோட்டின் அருகில் உள்ளதால், பொதுமக்கள் நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல இடையூறாக உள்ளது. எனவே ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் சுடுகாடு அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தைவள்ளுவன் தலைமையில் கட்சியினர் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரை, வாய்க்கால்கரை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் பனை மர விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து உள்ளோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இடையன்காட்டுவலசு கொங்கு வெள்ளாளர் அறக்கட்டளை செயலாளர் ரமேஷ், தலைவர் பூபதி உள்பட 20–க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில், ‘50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே புதிய சொத்து வரி உயர்வை உடனடியாக திருப்பப்பெற வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

பவானி பி.மேட்டுப்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘காந்திநகர் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலை கடந்து செல்வதற்கு வசதியாக பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

கோட்டையம்பாளையம், அத்தாணி, கள்ளிப்பட்டி, பங்களாபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:–

நாங்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அஞ்சலக சிறுசேமிப்பில் பணம் செலுத்தி வந்தோம். எங்களுக்கு படிப்பறிவு இல்லாத நிலையில் கூலி வேலை செய்து பணத்தை சேமித்து வந்தோம். கள்ளிப்பட்டியில் இயங்கிவரும் தபால் அலுவலர் எங்கள் சேமிப்பு தொகையை தர மறுத்ததால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதனால் ஈரோடு மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலர்கள் எங்களுடைய சேமிப்பு கணக்கு புத்தகத்தை பெற்றுக்கொண்டு பணம் தருவதாக உறுதி அளித்து சென்றார். 6 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு இன்னும் பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.

தற்போது அஞ்சலக அலுவலர்கள் சேமிப்பு புத்தகத்தை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளமாறு அறிவுறுத்துகிறார்கள். எங்களுடைய அசல் சேமிப்பு கணக்கு புத்தகத்தை பெற்றுக்கொண்டு தற்போது எங்களிடம் புத்தகத்தை கேட்பது எங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் 200–க்கும் மேற்பட்டோர் ரூ.86 லட்சத்திற்கும் மேல் சேமித்து வைத்துள்ளோம். இந்த பணத்தை தங்களுக்கு தராமல் அஞ்சல் துறையினர் மோசடி செய்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களுடை பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பத்மஜா மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்