அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படியை உயர்த்தி வழங்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

Update: 2018-08-12 23:45 GMT

புதுச்சேரி,

பாரதீய ஜனதாவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 7–வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி பென்‌ஷன் மற்றும் மருத்துவப்படியை உயர்த்தித்தர வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கவேண்டும் என்பதை புதுச்சேரி அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

இதனை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 13 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படாமல் உள்ள மருத்துவ படியை உடனடியாக அரசு வழங்கவேண்டும். பிற மாநிலங்களில் எல்லாம் 7–வது சம்பள கமி‌ஷன் உத்தரவை முறையாக பின்பற்றி வரும் நிலையில் புதுவையில் நிதி இல்லை என்று காரணம் காட்டி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வீட்டு வாடகைப்படி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் உடனடியாக மத்திய அரசின் 7–வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் புதுச்சேரி அரசு உயர்த்தி வழங்கவேண்டும்.

புதுச்சேரி லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். சொசைட்டிகள் மூலம் வேலைசெய்து ஓய்வுபெற்ற முதியோர்கள் கடந்த 3 மாதமாக மாதாந்திர பென்சன் தொகை கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர். மருத்துவ செலவுக்குக்கூட பணமின்றி மிகவும் சிரமப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே 3 மாதமாக வழங்கப்படாமல் உள்ள பென்சன் தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்