நன்னடத்தை கைதிகள், குடும்பத்தினருடன் சந்திக்க சிறப்பு ஏற்பாடு
கடலூர் மத்திய சிறைச்சாலையில் நன்னடத்தை கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் சந்திக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அவர்கள் தங்களது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதிகளில், நன்னடத்தையில் உள்ள 27 கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் சந்தித்து பேச சிறைச்சாலையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 27 ஆயுள் தண்டனை கைதிகளின் தாய், தந்தை, தம்பி, தங்கை, மனைவி, பிள்ளைகள், சித்தப்பா, சித்தி, மாமா என்று அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 112 பேர் சிறைச்சாலைக்குள் செல்ல பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். அதாவது 23 ஆண்கள், 48 பெண்கள், 41 குழந்தைகள் அடங்குவார்கள்.
தொடர்ந்து கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் அருகருகே அமர்ந்து, மனம்விட்டு பேசி மகிழ்ந்தனர். மேலும் சிறைக்குள்ளே தயார் செய்யப்பட்ட உணவை பெற்று, தங்களது உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதில் சிறை கைதிகளின் பிள்ளைகள் அவர்களது, மடியில் அமர்ந்து பேசியதையும், சில கைதிகள் தங்களது குழந்தைகளை கொஞ்சி விளையாடியதையும் பார்க்க முடிந்தது. இதுகுறித்து கைதியை பார்க்க வந்த ஒரு தாய் கூறுகையில், இத்தனை நாட்களாக சிறைச்சாலையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று தான் பார்த்து பேச முடிந்தது. ஆனால் தற்போது எனது மகனின் அருகிலேயே எனது குடும்பத்தினருடன் அமர்ந்து பேசியதுடன், அவனுடன் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டு மகிழ்ந்தோம். இந்த தருணத்தை நான் வீட்டில் இருந்தது போன்று உணர்ந்தேன். இதன் மூலம் எனது மனதில் உள்ள பாரம் குறைந்ததாக அவர் தெரிவித்தார்.
இதேபோல் கைதி ஒருவர் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டது மனநிறைவை தருகிறது. மொத்தத்தில் இது ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. இதை ஏற்படுத்தி கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார் அவர்.
மேற்கண்ட தகவல் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியிடப்பட்டு இருந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.