3 ரவுடிகள் கொல்லப்பட்ட வழக்கில் 10 மாதமாக தலைமறைவாக இருந்தவர் கைது

3 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 மாதம் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-12 23:16 GMT

புதுச்சேரி,

புதுவை முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர் என்ற நாய்சேகர், காந்தி திருநல்லூரை சேர்ந்த சதீஷ், சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெரால்டு (22) ஆகிய 3 ரவுடிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18–ந்தேதி வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பயங்கர சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் தொழிற்பேட்டை பகுதிகளில் மாமூல் வசூலிப்பது தொடர்பான பிரச்சினையில் மோதல் ஏற்பட்டு இந்த கொலைகள் நடந்திருப்பது தெரியவந்தது.

ஞானசேகரின் எதிர் அணியை சேர்ந்தவர்கள் குயிலாப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி தமிழரசன், அவரது கூட்டாளிகளை வைத்து இந்த பயங்கர கொலைகளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழரசன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 10 மாதங்களாக அவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற மணிகண்டன் வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சாதாரண உடை அணிந்த போலீசார் மணிகண்டன் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். இதையொட்டி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வெளியே வந்த மணிகண்டனை மேட்டுப்பாளையம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்