ரே‌ஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நுகர்பொருள் வாணிப கழக மாநாட்டில் தீர்மானம்

ரே‌ஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நுகர்பொருள் வாணிப கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-12 22:57 GMT

மதுரை,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் சங்கத்தின் 7–வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு, சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் தட்சிணாமூர்த்தி கொடியேற்றி வைத்தார். மாநில செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டில் ரே‌ஷன் கடைகளில் நூறு சதவீதம் உணவு பொருள் ஒதுக்கீடு செய்யவேண்டும். வறுமைக்கோட்டை காரணம் காட்டி மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் அரிசி, கோதுமை, மண்எண்ணெய் ஆகியவற்றின் அளவை மத்திய அரசு குறைக்கக்கூடாது. புதிய, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி பயனாளிகளை வெளியேற்ற நினைக்கும் மக்கள் விரோத நடவடிக்கையை தமிழக அரசு கை விடவேண்டும்.

நுகர்பொருள் வாணிப அலுவலகங்கள், கிடங்குகள், ரே‌ஷன் கடைகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி கடனாக ரூ.25 லட்சம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து சி.ஐ.டி.யு. மாநில பொதுசெயலாளர் சுகுமாறன் பேசினார்.

மேலும் செய்திகள்