மணல் கடத்தலை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லோடு ஆட்டோவை மோதி கொல்ல முயன்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்,
தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதி, ஆற்றின் உட்பகுதிகள் மற்றும் கரையோரங்களில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாக ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணிகளை தீவிர படுத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவராமமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு லோடு ஆட்டோ வந்தது. அதில் மணல் ஏற்றி வந்ததையறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் அந்த லோடு ஆட்டோவை நிறுத்த முயன்றார்.
அப்போது அந்த லோடு ஆட்டோவை ஓட்டி வந்த நபர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மீது ஆட்டோவை மோதி அவரை கொல்ல முயன்றாராம். இதில் சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீசார் லோடு ஆட்டோவை ஓட்டி வந்த குருகாட்டூரை சேர்ந்த அழகு சுப்பிரமணியன் மகன் முத்துகுமார் (வயது 28), அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (23), ஏரல் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன்கள் தேவாரம், ராஜி மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
மணல் திருட்டை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.