குடும்பத்திற்கு ஒருவர் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு

கைத்தறி தொழிலை பாதுகாக்க குடும்பத்திற்கு ஒருவர் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

Update: 2018-08-08 00:11 GMT
குடியாத்தம், 



தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், 4-வது தேசிய கைத்தறி தின விழா குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு மருத்துவ முகாம், கைத்தறி கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குனர் கே.மோகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு கைத்தறி சங்க நிர்வாகிகள் பி.எம்.தினகரன், ஜி.குமுதாகோபி, எல்.ஏ.அன்பழகன், எஸ்.குமார், எம்.டி.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் இணையத்தின் தலைவர் க.ருத்திரன் வரவேற்றார். டி.சி.எம்.எஸ். தலைவர் ஜெ.கே.என்.பழனி, கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் மொழிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் எஸ்.ஏ.ராமன் கலந்துகொண்டு கைத்தறி கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 10 நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் தலா ரூ.50 ஆயிரம் கடன் உதவித்தொகை, 2 பேருக்கு கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-
கைத்தறி தொழிலை பேணி பாதுகாக்க குடும்பத்திற்கு ஒருவர் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும். தமிழகத்தில் 1987-ம் ஆண்டு 4 லட்சத்து 27 ஆயிரம் கைத்தறிகள் இருந்தது. தற்போது 2 லட்சத்து 83 ஆயிரம் கைத்தறிகளாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் 1354 கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் சார்பில் 500 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 35 சதவீதம் கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள 65 சதவீதம் வெளி சந்தையில் விற்கப்படுகிறது. கைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையில் இலவச வேட்டி, சேலைகள் கைத்தறியில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தாசில்தார்கள் பி.எஸ்.கோபி, ரமாநந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, பள்ளி தலைமை ஆசிரியர் கீதாலட்சுமி உள்பட அரசு அதிகாரிகள், கைத்தறி துறை அதிகாரிகள், கைத்தறி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்