தேவூர் பகுதியில் பலத்த மழை: 200 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்

தேவூர் பகுதியில் பலத்த மழை எதிரொலியாக, 200 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-08-05 22:45 GMT
தேவூர்,

சேலம் மாவட்டம், தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்றாயனூர், பெரமாச்சி பாளையம், கோணக்கழுத்தானூர், ஒடசக்கரை, காணியாளம்பட்டி, வட்ராம்பாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், கோனேரிப்பட்டி, பொன்னன்பாளையம், கொட்டாயூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

அவ்வாறு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் விவசாயிகள் கரும்பு பயிர்களுக்கு உரம் இடுதல், நீர் பாய்ச்சுதல், மண் அணைத்தல், சோகை உரித்தல் என பராமரிப்பு பணிகள் செய்து வந்தனர். 10 மாதங்களில் கரும்புகள் அறுவடைக்கு தயாராகி விடுவது வழக்கம்.

தற்போது சாகுபடி செய்யப்பட்டு 3 மாதங்கள், 4 மாதங்களே ஆவதால் கரும்பு பயிர் தோகைகளுடன் நன்கு வளர்ந்து வரும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் தேவூர் பகுதியில் பலத்த காற்றுடன் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

இதில் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு கணுக்கள் உடைந்து அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்