பெண்ணாடம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி
பெண்ணாடம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியானார். திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள தி.அகரத்தை சேர்ந்தவர் வால்சாமி மகன் பெரியசாமி(வயது 30). விவசாயி. இவர் நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அகரம் கிராமத்தின் சுடுகாடு அருகே சென்றபோது பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லு£ரை நோக்கி வந்த அரசு பஸ், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பெரியசாமி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியசாமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.