நாகர்கோவிலில் பரிதாபம்: கேரள அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

நாகர்கோவிலில் கேரள அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-08-05 22:45 GMT
நாகர்கோவில்,

பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு காஞ்சிரங்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்தார்.

 புத்தேரி பாலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளுக்கு முன் ஒரு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை ராஜேஷ் முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது கேரள பஸ் மோதியது.

இதில் நிலை தடுமாறிய ராஜேஷ் மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராஜேசை மீட்டனர். ஆனால் கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.

 இதுபற்றி நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து காரணமாக புத்தேரி மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை போலீசார் சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்