கர்நாடகத்தை பிரிக்க பா.ஜனதா தூண்டிவிடுகிறது மந்திரி சி.எஸ்.புட்டராஜு குற்றச்சாட்டு
கர்நாடகத்தை பிரிக்க அரசியல் காரணங்களுக்காக பா.ஜனதா தூண்டிவிடுகிறது என்று மந்திரி சி.எஸ்.புட்டராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
மண்டியா,
கர்நாடகத்தை பிரிக்க அரசியல் காரணங்களுக்காக பா.ஜனதா தூண்டிவிடுகிறது என்று மந்திரி சி.எஸ்.புட்டராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
பாராட்டு விழா
மண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர், சி.எஸ்.புட்டராஜு. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த இவர் மாநில சிறிய நீர்ப்பாசனத் துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மண்டியா டவுன் பண்டி கவுடா லே-அவுட்டில் மாநில சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:-
பா.ஜனதா மீது குற்றச்சாட்டு
அகண்ட கர்நாடகத்தை பிரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தை பிரிக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அனுமதிக்காது. வளர்ச்சிப் பணிகள் செய்யாமல் வடகர்நாடகத்தை அரசு புறக்கணித்துவிட்டதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்கள். வடகர்நாடகத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்வது பற்றி எங்களுக்கு தெரியும். பா.ஜனதாவினரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் காரணங்களுக்கான பா.ஜனதா வடகர்நாடகத்தை தனிமாநிலமாக கோரி கர்நாடகத்தை பிரிக்க தூண்டிவிடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.
மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மந்திரி சி.எஸ்.புட்டராஜு பொதுமக்களிடம் குறை கேட்க வசதியாக அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை அவர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். சமீபத்தில் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமே கவுடா, மந்திரி சி.எஸ்.புட்டராஜு முன்னிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார்.
முன்னதாக மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்ட பிறகு மண்டியா வந்த சி.எஸ்.புட்டராஜுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.