திருப்பூரில் துணிகரம் ஆடிட்டர் வீட்டில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை– ரூ.50 ஆயிரம் திருட்டு
திருப்பூரில் ஆடிட்டர் வீட்டில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை– ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகரை அடுத்த திருநகர் 2–வது வீதியை சேர்ந்த முருகசாமி என்பவரின் மகன் ஜெகநாதன் (வயது 33). ஆடிட்டர். இவருடைய மனைவி ராதா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக செஞ்சேரிமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு விடுமுறை என்பதால் ஜெகநாதன் வீட்டை பூட்டி விட்டு மனைவியை பார்ப்பதற்காக செஞ்சேரிமலைக்கு சென்றுவிட்டார். நேற்றுகாலை ஜெகநாதனின் தந்தை முருகசாமி அந்த வழியாக சென்ற போது பூட்டப்பட்டிருந்த ஜெகநாதனின் வீடு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதன் பேரில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, அனுப்பர்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், செந்தில்குமார், குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் ஜெகநாதன் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் காம்பவுண்டு சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளதும், பின்னர் வீட்டு முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த 2 பீரோவையும் உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். ஆனால் அதில் நகை மற்றும் பணம் இல்லாததால் மர்ம ஆசாமிகள் பூஜை அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அந்த பீரோவின் உள் அறையில் இருந்த ஆரம், வளையல், கைச்சங்கிலி, சங்கிலி, மோதிரம் உள்பட 30 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட கைரேகை நிபுணர் சுப்பிரமணியம் தலைமையில் அதிகாரிகள் திருட்டுப்போன ஜெகநாதன் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வெற்றியும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது திருட்டுப்போன பூஜை அறையில் இருந்து மாடிக்கு ஓடியது. பின்னர் வீட்டிற்கு வெளியே சென்ற மோப்ப நாய் அடுத்த தெரு வழியாக ஓடிச்சென்று மீண்டும் ஜெகநாதன் வீட்டிற்கு வந்தது, யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. எனவே திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் அடுத்த தெரு வழியாக சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை மற்றும் பணம் திருட்டுப்போன ஜெகநாதன் வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள எந்த கட்டிடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் திருடர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் ஆடிட்டர் வீட்டில் பூட்டை உடைத்து 30 பவுன் மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.