142 அடியாக உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை: முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளதாகவும் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் மூவர் கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறினார்.

Update: 2018-08-04 22:15 GMT
முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து குமுளி 1–ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தை தொடர்ந்து மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அணையில் ஆய்வு செய்தபோது நீர்மட்டம் 134.25 அடியாக இருந்தது. கசிவு நீர் அளவு இயல்பான நிலையில் இருந்தது. அணை பாதுகாப்பாகவும், பலமாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அணையின் மதகுகள் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. அணைக்கு தேவையான சில பணிகளை இருமாநில அரசுகளும் இணைந்து செய்ய வேண்டும். அணைக்கு மின் இணைப்பு விரைவில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

வல்லக்கடவு வழியாக அணைக்கு செல்ல சாலை அமைக்க வேண்டும். இதற்கு முதற்கட்டமாக அந்த சாலையை ஆய்வு செய்துள்ளோம். முறையான அனுமதி பெற்று இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய படகுக்கு கண்காணிப்பு குழுவால் அனுமதி கொடுக்க இயலாது. இருமாநில அரசும் இணைந்து தான் இதை செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்