ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி 95 சதவீதம் நிறைவு

ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

Update: 2018-08-04 22:00 GMT
ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.

அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம், அணைகட்டு வழியாக பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழைக்கு அணை முழூவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இப்படி மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக வங்கக்கடலில் கலந்தது.

தடுப்பணை

இப்படி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும் தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்து அதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்பட்டன.

95 சதவீத பணிகள்

இந்த நிலையில் பூண்டி நீர் பிடிப்பு பகுதி மற்றும் ஒதப்பை பகுதியில் செப்டம்பர் மாதம் பலத்த மழை பெய்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நடந்து வந்த தடுப்பணை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. வெள்ளம் வடிந்த பிறகு கடந்த ஜனவரி மாதத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு இரவு பகலாக நடந்து வருகின்றன.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தடுப்பணை அமைப்பதில் கிட்டத்தட்ட 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள 5 சதவீத பணிகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும். அதன் பின்னர் மழை பெய்யும் போது தண்ணீரை தடுப்பணையில் சேமித்து வைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்