விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 9 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-08-04 23:15 GMT

திண்டிவனம்ம்,

திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 32). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணை செயலாளராக இருந்தார். கடந்த 2–ந் தேதி இரவு, அதே கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி மணிகண்டனை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

இது குறித்து மணிகண்டனின் தம்பி கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் வடகொளப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு(38) உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதும், இது தொடர்பாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 9 பேரையும் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை மேற்பார்வையில் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்–இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 9 பேரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் திண்டிவனத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வடகொளப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு, பெரம்பலூர் செட்டிக்குளத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பாலா(26), பெருமுக்கல் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40), எமகுண்டு மகன் வாசுதேவன்(26), முருகேசன் மகன் மோகன்(32), மேகநாதன் மகன் தேவநாதன்(28), நாராயணசாமி மகன் ஆனந்தன்(29), கூத்தான் மகன் மணிகண்டன்(29), செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பாலமுருகன்(27) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 அரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது பற்றி அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு கைதானவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்