தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் மின்கட்டணம் ரூ.1,500 கோடி நிலுவையில் உள்ளது அமைச்சர் பேட்டி

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ரூ.1,500 கோடிக்கு மின் கட்டணம் நிலுவையில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2018-08-04 23:15 GMT
நாமக்கல்,

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இதுவரை அரசு அலுவலகங்களில் உள்ள மின்கட்டண நிலுவை ரூ.1,500 கோடி ஆகும். இதில் அதிக அளவாக ரூ.900 கோடி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கட்ட வேண்டி உள்ளது. அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை வசூல் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிறிது சிறிதாக நிலுவை தொகையை கட்டி விடுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதற்காக தமிழகத்தில் புதிய செல்போன் செயலி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் புதிய தாலுகா அறிவிக்கப்பட்டு, அங்கு தாசில்தார் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த அலுவலகம் திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. மலை கிராமங்களில் சுப்ரீம் கோர்ட்டு தடையால் மின்கம்பங்கள் அமைக்க முடியாத நிலை உள்ளது. இதுபோன்று 5,100 வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கவேண்டி உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி பெற்று சுமார் 1,000 வீடுகளுக்கு மின்வசதி அளிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 4 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெற முயற்சி செய்து வருகிறோம். இந்த வீடுகளில் தற்போது சோலார் சக்தி மூலம் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்