கோத்தகிரி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 2 கன்றுக்குட்டிகள் பலி
கோத்தகிரி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 2 கன்றுக்குட்டிகள் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தன.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை கொணவக்கரை அருகே உள்ள பாத்திமட்டம் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். மாலை நேரமாகியும் 2 கன்றுக்குட்டிகள் திரும்பி வராததால் அந்த பகுதிகளில் தேடி பார்த்துள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து நேற்று காலை மீண்டும் கன்றுக்குட்டிகளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது தேவராஜ் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் 2 கன்றுக்குட்டிகள் இறந்து கிடந்தன.
இதையடுத்து, கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் வீரமணி மற்றும் தருமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் சிறுத்தைப்புலி தாக்கியதில் கன்றுக்குட்டிகள் இறந்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அந்த கன்றுக்குட்டிகளின் உடல் அப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.