திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்புவனத்தில் உள்ள மதுரை–மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2018-08-04 21:45 GMT

திருப்புவனம்,

திருப்புவனத்தில் மதுரை–மண்டபம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள பல்வேறு கடைகளை சேர்ந்தவர்களும், பிளாட்பாரங்களில் கடைகள் வைத்திருப்பவர்களும் சாலையை ஆக்கிரமித்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வந்தனர். மேலும் சமீபத்தில் தான் திருப்புவனத்தில் உள்ள மதுரை–தொண்டி 100 அடி வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் ஆக்கிரமிப்புகளால் சாலை சுருங்கிப்போனது. இதனால் நகரில் தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாகி போனது. இதனையடுத்து திருப்புவனம் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில் மதுரை–மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கடந்த 31–ந்தேதி ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருப்புவனம் புதூரில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. தாசில்தார் பாலகிருஷ்ணன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத், திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பொதுமக்கள், வர்த்தகர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பாக இருந்த மேற்கூரைகள் உள்ளிட்டவற்றை அகற்றிக்கொண்டனர். சாலையோர கழிவுநீர் கால்வாய்களை கடந்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றினர். மேலும் சாலையின் இருபுறமும் பிளாட்பாரங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறு, சிறு கடைகளை அவர்களே அகற்றிக்கொண்டனர்.

மேலும் செய்திகள்