நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா: காவிரி கரையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்

காவிரி கரையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

Update: 2018-08-04 04:01 GMT
நாமக்கல்,

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் பூஜைகள் செய்தனர். தலையில் தேங்காய் உடைத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் ஆடி 18 பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகில் காவிரியில் புனித நீராடி வீட்டில் இருந்து கொண்டு வந்த முளைப்பாரியை வைத்தும், பழங்கள், பூ, மஞ்சள் ஆகியவற்றை விநாயகருக்கு படையல் இட்டு, பின்னர் கன்னி தெய்வத்திற்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பூஜையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறை புதுமண தம்பதியினரும், கன்னிப்பெண்களும் கட்டிக்கொன்டனர். பின்னர் கன்னிப்பெண்களுக்கு சேலை, துணி உள்ளிட்டவைகளை வழங்கி ஆசிபெற்றனர்.

பிற்பகல் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர் தங்களது குல தெய்வ கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போல் வேடமணிந்து மகாபாரத கதைகள் பாடி, கதையில் போரில் பயன்படுத்திய ஆயுதங்களையும், கோவில்களில் உள்ள ஆயுதங்களையும் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்தனர். பின்னர் ஆயுதங்கள், கோவில் கருவறையில் உள்ள பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் அங்கு கூடியிருந்தனர்.

மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது விழாவை முன்னிட்டு மக்கள் கூட்டம், கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடினார்கள். செல்வம் பெருக வேண்டி பூஜை செய்து வழிபட்டு அசலதீபேஸ்வரரை வணங்கினார்கள். மாலையில் காவிரி ஆற்றில் நவதானியங்களால் ஆன முளைப்பாரி விடும் நிகழ்ச்சி நடந்தது. புதுமணத் தம்பதிகள், சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து முளைப்பாரி ஆற்றில் விடப்பட்டது. அதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மோகனூர் காவிரி ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்காக பாதுகாப்பு பணியில், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினரும் முகாமிட்டிருந்தனர். சேலம், மல்லூர், ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். விழாவை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில், நாமக்கல்லில் இருந்து மோகனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் குண்டம் பராமரிப்புக்குழு சார்பில் 1,008 தீர்த்தக்குட அபிஷேக விழா மற்றும் கோமாதா பூஜை நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல குமாரபாளையத்தில் லட்சுமி நாராயண சாமி கோயில், பாண்டுரங்கநாதர் கோவில், அம்மன் நகர் அய்யப்பன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்பட அனைத்து இந்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல திரளான பக்தர்கள் குமாரபாளையம் காவிரி கரையிலும் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.

பள்ளிபாளையம் காவிரி ஆடி 18-ஐ முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வந்து காவிரி ஆற்றில் குளித்து காவிரி அன்னையை வழிபட்டனர். புதிதாக திருமணமாக ஜோடிகளும் வந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து காவிரியை வணங்கி பின்பு பெரியவர்களை வணங்கினர். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் மினிலாரி போன்ற வாகனங்களில் வந்து காவிரியில் அதிகாலை குளித்து தீர்த்தம் எடுத்து சென்றனர்.

இதேபோல காவிரி கரையில் உள்ள மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பிரார்த்தனையுடன் அலகு குத்தி சென்றனர். மேலும் 15 அடி நீளமுள்ள வேல்களை பெண்கள் கன்னத்தில் அலகு குத்தி ஊர்வலமாக சென்றது மெய் சிலிர்க்க வைத்தது. இதே போல நாமகிரிப்பேட்டை பகுதிகளிலும் நேற்று ஆடி 18 சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்