வந்தவாசி அருகே போலீஸ் வேடமணிந்து விவசாயி வீட்டில் ரூ.30 ஆயிரம் திருட்டு மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
வந்தவாசி அருகே போலீஸ் வேடமணிந்த மர்ம கும்பல் விவசாயி வீட்டில் நுழைந்து அங்கிருந்த ரூ.30 ஆயிரத்தை திருடிக் கொண்டு சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா புலிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39), விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அங்கு வீடு கட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் வந்த 6 பேர் இவருடைய வீட்டிற்குள் புகுந்தனர். இதில் இருவர் போலீஸ் சீருடை அணிந்திருந்தனர். அவர்கள் வெங்கடேசனிடம் நாங்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்றனர். மேலும் உன் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறி வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி புரட்டி போட்டு பார்த்தனர்.
ரூ.30 ஆயிரம் திருட்டு
அப்போது வெங்கடேசன் பசுமை வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை மர்ம கும்பல் திருடிக் கொண்டு காரில் சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன் வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் விசாரணையில் வெங்கடேசனின் வீட்டுக்கு வந்தவர்கள் போலீசார் இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் கிருபானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலீஸ் போல் வேடமணிந்து பணத்தை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.