கிராமப்புற வேலை திட்டத்தில் முறைகேடு: பணிதள பொறுப்பாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்
கிராமப்புற வேலை திட்டத்தில் முறைகேடு செய்த பணிதள பொறுப்பாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அணைக்கட்டு,
அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட செதுவாலை மற்றும் மகமதுபுரம் ஊராட்சிகளில் தேசிய கிராமப்புற வேலை திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டில் நீராதாரங்களை தூர்வாரும் பணி நடந்தது. அதனை தணிக்கை செய்வதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
மகமதுபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் ராமன், பணிதள பொறுப்பாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் சித்திக் ஊராட்சி கள அலுவலர்கள் கீதா, சசிரேகா, சந்தியா ஆகியோர் கணக்குகளை சமூக தணிக்கை செய்தனர்.
அப்போது பதிவேடுகளில் அடித்தல், திருத்தல் செய்தது, பணி செய்யாத தொழிலாளர்கள் வந்ததாக கணக்கு காட்டி கூலி வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகளை கண்டறிந்தனர். இதனையடுத்து சமூக தணிக்கை அதிகாரிகள் பணிதள பொறுப்பாளர்களுக்கு ரூ. 7 ஆயிரத்து780 அபராதம் விதித்தனர்.
இதேபோல் செதுவாலை ஊராட்சியில் நடந்த தணிக்கையில் நிதி முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பணிதள பொறுப்பாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 220 அபராதம் விதிக்கப்பட்டது.