அறுந்து தொங்கிய மின்கம்பி உரசியதில் கூரியர் வேனில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

அறுந்து தொங்கிய உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் கூரியர் வேனில் மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-08-03 22:30 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் ஜானகி நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசங்கர்(வயது 36). இவர், திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி காவேரி நகர் பகுதியில் இயங்கிவரும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் கூரியர் தபால்களை ஏற்றுவதற்காக வேனை, கூரியர் நிறுவனம் எதிரே சாலையோரம் நிறுத்தினார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர்அழுத்த மின்கம்பியின் ஒரு பகுதி அறுந்து தொங்கிய நிலையில் இருந்தது.

இதை கவனிக்காமல் அதன் அருகே ஜெயசங்கர், கூரியர் வேனை நிறுத்தினார். இதனால் அறுந்து தொங்கிய மின்கம்பியில் உரசியபடி நின்றதால் கூரியர் வேனில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

மின்சாரம் தாக்கி பலி

இதை அறியாமல் டிரைவர் ஜெயசங்கர், வேனின் கதவை திறந்துகொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசங்கர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த திருவேற்காடு போலீசார், பலியான ஜெயசங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்