கலபுரகியில் விரைவில், விமான நிலையம் அமைக்கப்படும் தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கலபுரகியில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

Update: 2018-08-03 22:00 GMT

பெங்களூரு,

கலபுரகியில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கட்டமைப்பு வசதிகளை...

கர்நாடகத்தில் நிறைய ‘ஸ்டார்ட்அப்‘(புதிதாக தொழில் தொடங்குதல்) நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெங்களூருவை தவிர்த்து பிற நகரங்களில் அதாவது சாம்ராஜ்நகர், மைசூரு, துமகூரு, உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொழில் தொடங்க தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சாம்ராஜ்நகரில் அமைக்கப்பட உள்ள தொழில் பூங்காவுக்கு தேவையான குடிநீர், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கபினி அணையில் இருந்து அங்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பெங்களூரு–சென்னை தொழில் சாலை திட்டத்திற்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிலங்களும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

200 கண்காட்சி அரங்குகள்

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அந்த தொழில் சாலை திட்டத்தில் ஜப்பானும் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. மைசூருவில் ரூ.2,500 கோடி செலவில் ஒரு தனியார் பெயிண்ட் நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்குகிறது. வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள்.

200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 60 ஆயிரம் சதுர அடியில் இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்படுகிறது. தொழில் தொடங்க உகந்த சூழலை கர்நாடகம் ஏற்படுத்தி வருகிறது. அவற்றுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கலபுரகியில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த விமான நிலையம் விரைவில் செயல்பட தொடங்கும்.

நல்ல தரமான சாலைகள்

ஹாசன், சிக்கமகளூருவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூரு விமான நிலையத்தில் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நல்ல தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கட்டமைப்பு தொடர்பு வசதிகள் நன்றாகவே உள்ளன.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

மேலும் செய்திகள்