பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த புதுவை நியமன எம்.எல்.ஏ.க்களின் அதிகாரங்களை முடக்க திட்டம்

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களின் அதிகாரங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Update: 2018-08-03 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசால் நேரடியாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இந்தநிலையில் பெரும் சட்ட போராட்டங்களுக்கு இடையே நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்திருந்தது. அந்த கருத்தின் அடிப்படையில் கடந்த 1–ந்தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் அவர்கள் அனைவரையும் சட்டமன்றத்துக்குள் சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதித்தார்.

இந்த அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள 11–9–2018 வரை மட்டுமே பொருந்தும் எனவும், அதன்பின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்தார். அதாவது 41 நாட்கள் மட்டுமே அவர்கள் எம்.எல்.ஏ.வாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு 41 நாட்களுக்கு உரிய சம்பளம் மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே அவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

அவர்களுக்கு சட்டமன்ற வளாகத்திற்குள் அலுவலகம் ஒதுக்குவது, எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் வழங்குவது குறித்தும் அதன்பின்னர்தான் முடிவு செய்யப்பட உள்ளன. ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த காலங்களில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பட்டு நிதி வழங்கப்பட்டு வந்தது. அந்த நிதி வழங்குவதற்கான உத்தரவினை ரத்துசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் அரசு விழாக்களுக்கு அழைப்புகள் அனுப்புவதையும் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசின் நலத்திட்டங்களுக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு செய்யும் அதிகாரமும் ரத்துசெய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகள்